Annamalaiyin Adhichayak Kal


My post content
அண்ணாமலையின் அதிசயக் கல்
அரச மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருக்கும் அண்ணாமலையை தெரியாதவர்கள் கிடையாது. ஒரு பெரிய பாறையை அழகாக வட்டமாக செதுக்கி எடுத்து தன் முன்னால் வைத்திருப்பார். அவர் அருகில் ஒரு பெரிய பெட்டியில் சிறிய பெரிய மூட்டைகள் இருக்கும்.
அந்த ஊரிலிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி கதை கதையாகச் சொல்ல அவரிடம் வருவார்கள். அதற்கு ஒரு விரிவான நடைமுறை இருந்தது. அவரிடம் வருபவர் முதலில் ஒரு முட்டையை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த முட்டையின் அளவு அவருடைய பிரச்சினையின் அளவுக்கு தகுந்தாக இருக்க வேண்டும். அந்த மூட்டையை தலையில் வைத்துக் கொண்டு அந்த பிரச்சினயைப் பற்றி விரிவாகக் கூறவேண்டும். அதை தீர்க்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகளையும் கூற வேண்டும். பிறகு அந்த மூட்டையை அந்த கல்லில் வைத்து விட வேண்டும். வைக்கும் போது, ‘ என் சுமையை உன்னிடம் கொடுத்துவிட்டேன். அதை நீ தாங்கும் வரை எனக்கு பாரம் இல்லை‘ என்று கூறவேண்டும். பிறகு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும்.
அண்ணாமலை அவர்கள் பிரச்சினைக்கு ஒரு வழி அமைத்து அதனை அந்த மூட்டையில் வைத்து விடுவார். காலப் போக்கில் அந்த கல்லில் முட்டையை வைத்த உடனேயே மனதிலிருந்து ஒரு பாரம் இறங்கிய உணர்வு அந்த ஊர் மக்களுக்கு ஏற்படத் தொடங்கியது. அதன் காரணமாக பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல வழி கண்டுபிடிக்க அவர்களால் முடிந்தது.
ஒவ்வொருவராக அந்தக் கல் வைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அழகுபடுத்தினர். பக்கத்து ஊர்களுக்கும் இந்த செய்தி பரவியது. பலர் வரவால் இந்த ஊர் மக்களின் வியாபாரம் செழித்து விளங்கியது. அதுவே பல பிரச்சினைகளுக்கு சமாதானமும் ஆகியது.
இப்படி சிறிது காலம் கடந்த பிறகு, இது ஒரு இயந்திர வழக்கமாக மாறி விட்டது. கூட்டம் அதிகரித்ததால் எல்லோருக்கும் போதுமான நேரம் கிடைக்காததால் முதலில் நிச்சயித்த முறைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. தங்கள் பிரச்சினைகளை சீக்கிரமாக சொல்லிவிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி சொல்ல வேண்டியது தவறியது. கூட்டத்தை வைத்து காசு சேர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் ஊடுருவி பலரையும் ஏமாற்றி பணம் பறிக்க ஆரம்பித்தனர். எல்லோருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்த அண்ணாமலை தான் ஆரம்பித்த வழி தவறான பாதையில் போவதை கண்டு வருந்தினார். ஒரு நாள் காலை எல்லோரும் கூடி இருக்கும் போது, ஒரு பெரிய சுத்தி எடுத்து வந்து அந்தக் கல்லை பொடிப் பொடியாக உடைக்க ஆரம்பித்தார். எல்லோரும் அலற ஆரம்பித்தனர். அவரை யாராலும் தடுக்க முடியவில்லை. கல் முழுவதுமாக உடைந்து முடியும்வரை அவர் வேக வேகமாக தன் சுத்தியால் அதை அடித்துக்கொண்டே இருந்தார்.
பிறகு ஒரு பெரு மூச்சு விட்டு கூட்டடத்தை ஒரு தடவை கண்ணால் அளந்தார். பிறகு கூறினார், “நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கல்லின் துண்டை எடுத்துச் செல்லுங்கள். ஒருவர் ஒரு துண்டு எடுக்க வேண்டும். அதை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து அதில் போட்டு வையுங்கள். உங்களுக்கு பிரச்சினை வரும் பொழுது அந்த பாத்திரத்தின் முன் உட்கார்ந்து, கண்ணை மூடி தியானம் செய்து, ‘என் கவலை உன் கவலை. இதை தீர்க்க என்னால் முடிந்த எல்லா முயற்சிகளும் நான் செய்வேன். எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்,’ என்று சொல்லுங்கள். பிறகு அந்த பாத்திரத்திலிருந்து கொஞ்சம் நீர் எடுத்து குடியுங்கள். இந்தக் கல் நீர் உங்களை சுமை தாங்கியாக மாற்றும். உங்கள் கவலை தீர்ந்த பிறகு அந்த நீரை செடியில் கொட்டிவிடுங்கள். எந்த சுமை தாங்கியும் சில நேர அளவுதான் தேவைப்படும். நாம் இளைப்பாறிய பிறகு நம் சுமையை நாமே தான் தூக்க வேண்டி இருக்கும். கவலை என்ற சுமையை எந்நேரமும் தலையில் வைத்திருக்காதீர்கள். கீழே இறக்கி வைத்து விடுங்கள். இப்பொழுது இந்த அதிசயக் கல்லின் சக்தி உங்களுக்கு உங்கள் வீட்டிலேயே, உங்கள் உள்ளத்திலேயே கிடைக்கும்.” முனைவர் ரங்கநாயகி, ஆனந்த், குஜராத்