Chirippum Chinthamaniyum


My post content
சிந்தாமணியின் சிரிப்புமணி
சிரித்துக் கொண்டே வந்தாள் சிந்தாமணி.
தெரு முனையில் கண்ட காட்சி நினைவுக்கு வர மறுபடியும் சிரித்தாள்.
இரண்டு நண்பர்கள் பெரிதாகச் சத்தமிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். புலனத்தில் ஏதோ தவறான செய்தி பகிர்ந்தது தான் சண்டையின் காரணம்.
சண்டை முற்றியதால் எல்லோரும் அவர்களை சூழ்ந்துகொண்டு என்ன நடந்தது என்று அறிய ஆவலாகப் பார்திருந்தனர்.
சிந்தாமணியும் அங்கே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள். வாரப் பத்திரிகைகளுக்கு கதை எழுதுவதை பொழுது போக்காக கொண்டதால், இந்த மாதிரி எதிர்பாராத நிகழ்ச்சிகளால், புதிய கதைக்கு ஒரு கருத்துக் கிடைக்கலாம் என்று நினைத்து, சண்டையை கவனித்துக் கேட்டாள்.
உயரமாக சுருண்ட முடியுடன் இருந்த பையன் சொன்னான்,
"கிரண், நீ கூட இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை."
"நீ என்ன சொல்ல வர ரவி, அதை புரியர மாதிரி சொல்லு," என்றான் கைபேசியுடன் நின்ற அவன் நண்பன்.
"நான் உன்னைக் கேட்டதுக்கு நீ சரின்னு சொன்னே. இப்போ இல்லங்கர."
"நான் எதை இல்லன்னு சொன்னேன்."
"ஒன்னும் தெரியாத மாதிரி பேசாதே."
"நீ எல்லா தெரிஞ்ச மாதிரி பேசாதே."
ஒரு வயதான பெரியவர் இருவர் இடையில் புகுந்து மெதுவாகக் கேட்டார், என்ன நடந்தது என்று எனக்கு விளக்கமாகச் சொல்லுங்கன்னு.
ஒரு சில வினாடி இருவரும் பேசவில்லை.
பிறகு ரவி என்று அழைக்கப் பட்ட பையன் சொன்னான், "இதே மாதிரி போன மாதம் எங்களுக்குள்ள சண்டை நடந்தது. நான் இவனிடம் கேட்டேன் பரீட்சைக்கு இரண்டு பாடத்தில் எதை படிக்க வேண்டுமென்று. இவன் சொன்னான் ஒன்று படிக்க வேண்டும் என்று. நான் பரீட்சையில் மிகவும் குறைந்த எண் எடுத்தேன். ரெண்டு பாடமும் படிக்க வேண்டி இருந்தது. இவன் பேச்சை கேட்டு ஒன்றுதான் படித்தேன்".
"நான் அப்படி சொல்லவே இல்ல. நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட. நான் சொன்னேன் ஒன்றா படிக்கலாம் என்று. அதாவது சேர்ந்து படிக்கலாம்னு சொன்னேன்." என்றான் கிரண்.
"சரி அத விடு. இப்போ இந்த விசயம் பேசு."
பெரியவர் சொன்னார், "பழம் கதையை விட்டு விட்டு இப்போ என்ன தகராருன்னு சொல்லுங்க."
ரவி சொன்னான், "நான் இவனுக்கு சொன்னேன், நா குளிச்சிட்டு வரென். நாம்ப கோவிலுக்கு போகலாம்னு. அதுக்கு இவன் பதில் போடறான், இந்த நிலமைல கோவிலுக்கு வேணாம் வேற எங்கயாவது போகலாம்னு."
"நிலமைக்கு என்ன கொரச்சல்னு கேக்கறேன். அதுவும் கோவிலுக்கு போக நிலமை என்ன நிலமை?"
கிரண் ரவியை பார்க்காமல் பெரியவரை பார்த்து சொன்னான். "நான் நல்லதற்காக சொல்வதெல்லாம் இவன் தப்பாகவே எடுத்துக் கொள்கிறான்."
பெரியவர் ரவியை பார்த்து சொன்னார். "முழு செய்தியும் படி. அப்பொழுது தவறான புரிதலுக்கு இடம் இருக்காது."
ரவியின் குரல் உயர்ந்தது. முழுவதுமாகப் படித்த பிறகுதான் எனக்கு கோபம் வந்தது. என் நிலமை சரியில்லன்னு சொல்றான்.
"அவன் என்னை என்ன கேட்டான் தெரியுமா? ஏன் நீ குடிக்கலயான்னு கேட்டான். நான் என்னிக்குமே குடித்ததில்ல. அது இவனுக்கும் தெரியும்." என்று சொன்னான் கிரண்.
"இவன் என்னத்த குடிச்சி எந்த நிலமைல இருக்கான்னு தெரியாம கோவில் போக வேணாம்னு…"
அவன் பேச்சை இடையில் வெட்டி ரவி உடனே சொன்னான், "பாருங்க எப்படி பேசரான்னு. நான் குளிக்கறத பத்தி பேசினா இவன் குடிக்கறத பத்தி பேசரான்."
கிரண் கத்தினான், "நானா பேசறேன். நீ தானே எனக்கு செய்தி போட்ட."
ரவி பதிலுக்கு கத்தினான், " நான் என்ன போட்டேன், நீ என்ன படிச்சே".
பெரியவர் கொஞ்சம் குரலை உயர்த்தி ஆணையிடுவது போல் சொன்னார், "ரெண்டு பேரும் அமைதியா இருங்க ஒரு நிமிடம்."
"ரெண்டு பேரும் நேரில் பாத்து பேசறீங்க. ரெண்டு பேர் கையிலயும் கைபேசி இருக்கு. இப்போ ரெண்டு பேரும் கைபேசிய மாத்திக்குங்க. உன் கைபேசிய அவனுக்கு கொடு. அவன் கைபேசிய நீ எடுத்துக்க. ஒரு தடவை படிச்சி பாருங்க. பிறகு பேசிக்கலாம்".
கிரண் தன் கைபேசியை ரவிக்கு கொடுத்துவிட்டு, அவன் கைபேசியை எடுத்துக் கொண்டான்.
இருவரும் தாங்கள் அனுப்பிய செய்தியை படிக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு வரி படித்ததும் ரவி தன் தலையில் கைவைத்து, "அடக் கடவுளே! நான் குளித்திருக்கிறேன் என்று தட்டச்சு செய்தால் இது தானாகவே திருத்தி குடித்திருக்கிறேன் என்று அனுப்பி இருக்கிறதே!" என்றான்.
அதைக் கேட்டு கிரண் சிரிக்க, மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள். கடைசியாக ரவியும் சிரிக்க ஆரம்பித்தான்.
சிரித்துக் கொண்டே பெரியவர் சொன்னார், "தவறான புரிதலால் வரும் சண்டையை தடுக்க ஒரே வழி, தானாகவே சரி செய்யும் கருவியாக இல்லாமல், மனிதனாக இருந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது".
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிந்தாமணி சிரிக்க மட்டுமல்லாமல் கொஞ்சம் சிந்திக்கவும் செய்தாள்.
கருவிகளால் சூழப்பட்ட நாமும் கருவியாக மாறுகிறோமோ?
கருவிகளின் மேல் காட்டும் நம்பிக்கை மனிதர்களிடம் காட்ட மறந்தோமோ?
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு புரிந்து கொள்ளும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து போகிறோமோ?
பாகம் 2
சிந்தாமணியைப் பற்றிதான் உங்களுக்கு தெரியுமே? எந்த சிரிக்க வேண்டிய விசயத்திலும் சிந்தனையை நுழைப்பவள் அவள்.
வழியில் ஒரு சண்டையை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அங்கு என்ன நடந்தது தெரியுமா?
அவள் வீட்டுக்கு இருபக்கத்திலும் குடியிருக்கும் பெண்களுக்கு இடையில் பெரிய சண்டை.
வலது பக்கத்து வீட்டு சரளா கேட்டாள், "நீ எப்பொழுதுமே இப்படித்தான். எதாவது செய்தி புலனத்தில் போட்டுவிட்டு அதை பகிரும் முன் படிக்க கூட மாட்டாய்."
இடது பக்கத்து வீட்டு விமலா கண்ணை பெரிதாக்கி விழித்துப் பார்த்தாள். "அப்படி என்னதான் எழுதி விட்டேன் நான். ஒன்னும் இல்லாத விசயத்திற்கு ஏன் அமர்க்களம் செய்கிறாய்?"
"நானா அமர்க்களம் செய்கிறேன். நீயல்லவா அமர்க்களமாக செய்தி போடுகிறாய். போன மாதம் ஞாபகம் இருக்கிறதா? ஒரு அருமையான செய்தி போட்டாயே!"
"அப்படி என்ன போட்டேன். எந்த சின்ன விசயத்தையும் நீதான் பெரிதாக்குகிறாய்."
"நான் அப்போ பல் வைத்தியரிடம் போயிருந்தேன். வலியோடு கன்னத்தை கையில் ஏந்தி உக்கரும் போது உன் செய்தி வருகிறது. 'உனக்கு பல் கிடைத்ததா? எனக்கு கிடைக்க வில்லை. எனக்கு கொஞ்சம் கொடுப்பாயா என்று'."
"நான் என்ன உன் பல்லையா கேட்டேன். பால் என்று எழுதப் போய் தவறாக பல் என்று ஆகியிருக்கிறது. இது என்ன ஒரு பெரிய விசயம்?"
கேட்டுக் கொண்டிருந்த சிந்தாமணி கற்பனையில் சரளா தன் பல்லை கையிலெடுத்து விமலாவுக்கு கொடுப்பது போல் கற்பனை செய்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
"அந்த விசயம் இப்போ எதுக்கு? இன்னிக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு".
" இன்னிக்கு நீ செய்த வேலை இருக்கிறதே நம் ரெண்டு பேரயும் தொந்தரவில் மாட்டி விட்டிருக்கும்."
"அப்படி என்ன சொல்லிவிட்டேன். உனக்கு வரவேண்டிய பணம் வந்து சேர்ந்ததா என்று கேட்டேன்."
சிந்தாமணி பொறுக்க முடியாமல் கேட்டாள். "என்ன ஆச்சு சரளா? ஏன் இவ்வளவு கோபமாய் இருக்கிறாய்?"
" பாரு சிந்தாமணி, இவ செய்ர வேலய. நான் ஒரு காவல் நிலையத்தில் எனக்கு ஏதோ ஒரு எண்ணிலிருந்து வரும் வேண்டாத அழைப்புக்காக புகார் செய்ய போயிருந்தேன். என் கைபேசி காவல் ஆய்வாளர் கையில் இருந்தது. அவர் அந்த கைபேசி எண்ணை கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவள் செய்தி வருகிறது.
எனக்கு முன்னால் காவல் ஆய்வாளர் அந்த செயதியை மனதிற்குள் படித்தார். படித்து விட்டு தலையை தூக்கி என்னை ஒரு மாதிரி பார்த்தார். நான் என்ன வென்று புரியாமல் உட்கார்ந்திருந்தேன்.”
அந்த ஆய்வாளர், "உங்களுக்கு விமலாவிடம் இருந்து தினசரி செய்தி வருமா?" என்று கேட்டார்.
"எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆமாம் எப்போதாவது வரும். ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன்.
"நீங்கள் இருவரும் கூட்டாக ஏதாவது வியாபாரம் செய்கிறீர்களா?" என்றார்.
நான் இல்லை என்று சொன்னேன். அவர்கள் என் பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.
"நீங்கள் இருவரும் சேர்ந்து என்ன தொழில் செய்கிறீர்கள்," என்று மறுபடியும் கேட்டார்.
நாங்கள் தொழில் எதுவும் சேர்ந்து செய்யவில்லை என்றேன்.
ஆனாலும் அவர் நம்பாமல் உங்கள் இருவர் வீட்டையும் நான் சோதனை போட வேண்டும் என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படி என்ன செய்தி விமலா அனுப்பி இருக்கக்கூடும் என்று தெரியவில்லை.
இடையில் குறுக்கிட்ட விமலா சொன்னாள், "நான் என்ன பெரிசா கேட்டுட்டேன். உனக்கு பணம் வந்து சேர்ந்ததா என்றுதானே கேட்டேன். இதிலென்ன தப்பு?"
"இங்க பாரு சிந்தாமணி. இவ செய்த வேலைய".
சரிதாவின் கைபேசியை வாங்கிப் பார்த்த சிந்தாமணி திகைத்துப் போன முகத்துடன் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் நின்றாள்.
விமலா பொறுமை இழந்து தவித்துக் கொண்டிருந்தாள். "ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பெரிய அரசாட்சியை பரி கொடுத்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு படிக்கிரீங்க. என்னதான் நடந்ததுன்னு சொல்ரீங்களா?" என்றாள்.
சரளா கோபத்தோடு முறைத்தாள். "இங்கே பாரு நீ செய்தி அனுப்பிய அழகை," என்று சொல்லி தன் கைபேசியை அவள் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கி சத்தமாகப் படிக்க ஆரம்பித்தாள் விமலா.
"உனக்கு இன்றைய பணம் வந்து சேர்ந்ததா? இல்லை என்றால் நான் அனுப்பி வைக்கவா?"
"பணமா எழுதி இருக்கே? சரியா பாத்து படி," என்று கோபமாக சொன்னாள் சரளா.
மறுபடியும் படித்தாள் விமலா. "உனக்கு இன்றைய பிணம் வந்து சேர்ந்ததா? இல்லை என்றால் நான் அனுப்பி வைக்கவா?"
"ஓ பணம் எழுதப்போய் பிணம் என்று எழுதிட்டேன்."
சிந்தாமணி சொன்னாள், "இதிலிருந்து காவல் ஆய்வாளர் என்ன புரிந்து கொண்டிருப்பார் என்று தெரிகிறதா? நீங்கள் இருவரும் தினம் பிணங்களின் போக்குவரத்து செய்கிரீர்கள் அல்லது சடலங்களின் கடத்தலில் ஈடுபட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறார்."
விமலா திறந்த வாய் மூடாமல் அவள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
சரளா சொன்னாள், "சமாதானம் சொல்லி தப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இனிமேல் நீ எனக்கு எந்த செய்தியும் அனுப்பாதே".
கேட்டுக் கொண்டிருந்த சிந்தாமணி சிரிப்பை அடக்கி முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டாள்.
பிறகு மெதுவாக சொன்னாள், "நாம் பேசும் போதும், எழுதும் போதும், நாம் சொல்வதை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே யோசித்துப் பேச வேண்டும், எழுதியதை படித்துப் பார்த்து அனுப்ப வேண்டும்".
விமலா, "நான் நல்ல பாடம் இன்று கற்றுக் கொண்டேன். ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்த பிறகு செய்தி போடுகிறேன். என்னை மன்னித்துவிடு சரளா," என்றாள்.
சரளா சிரிக்க ஆரம்பித்தாள். "கடைசியில் நான் விளக்கி சொன்ன பொழுது காவல் ஆய்வாளர் கூட சிரிக்க ஆரம்பித்தார். இதை அவர்களால் மறக்கவே முடியாது என்றார்".
சூழ்நிலை சாதாரணமாக மாறியதால் சிந்தாமணியும், விமலாவும் கூட சிரிக்க ஆரம்பித்தார்கள்.
நீங்களும் கொஞ்சம் கவனமாக செய்திகளைப் பகிருங்கள். அனுப்புவது பணமா அல்லது பிணமா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
சிரிப்பும் சிந்தனையும் சேர்ந்து இருந்தால், புலனமும் புன்சிரிப்பும் கூடி வாழும்.