Karuvi Evaro Kaiyaalbavar Evaro

black and white robot toy on red wooden table
black and white robot toy on red wooden table

My post content

கருவி எவரோ கையாள்பவர் எவரோ

அஞ்ஞானம் புவியில் அறவே ஒழிக்க

விஞ்ஞானம் வளர்ந்தது வேரூன்றிய மரமாய்

குக்கிராமத்துக் குழந்தைகள் கிரமமாய் படிக்க

குவித்து வைத்தது பாடங்களின் பொற்காசு

முகம் தெரியாமல் உழைத்த உழவர்களுக்கு

முன்னால் முளைத்தது உலகளாவிய சந்தை

பழங்குடி மக்களின் கைவினைப் பொருட்கள்

அழகாக விற்பனையானது வலைத்தளம் வழியாக

முன்னோர்களை மணிக்கணக்கில் முழுக்கிய பணிகளை

கணினியாலே செய்து முடித்தது நொடிநேரத்தில்

தொலை தூரம் நடந்து பெற்ற தொடர்பை

தொட்டவுடன் கைக்குள் அடக்கியது கைபேசியில்

கண்காணாக் காட்சிகளை காணொளியில் கொணர்ந்து

மணப்பெண்ணாய் அமர்த்தியது படுக்கையறையில்

இயற்கையின் சீற்றத்தை சிறப்பாகக் கணித்து

செயற்கை நுண்ணறிவால் உயிர் காத்தது

அதிசய வழிமுறைகளை வக்கணையாய் வழிநடத்தி

மருத்துவ மந்திரஜாலத்தை மேடை ஏற்றியது

சந்திர லோகத்தில் சகஜமாய் உலாவி

செவ்வாய் கிரகத்தில் குடி பெயர்ந்தது

வளர்ச்சிக்கு தேவை விஞ்ஞானம் என்றால்

மலர்ச்சிக்கு தேவை மெய் ஞானம்

கருவியோடு கருவியாய் மரக்காலாய் மாறாமல்

கருணையோடு கவிதையோடு கருவிகளைக் கையாளுவோம்.