Thirukkural Story

My post content

திருக்குறள் கதை

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

மேகங்களுக்கிடையில் ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்தான் மாசிலாமணி.

ஓவ்வொரு மேகத்திலிருந்தும் அதற்கு மேலுள்ள மேகத்திற்கு தாவி, அங்கு சிறிது நேரம் இளைப்பாறி பிறகு முன் சென்றான்.

ஒரு அற்புதமான பொன்னிற மேகம் அவன் கண்ணைக் கவர்ந்தது. அதை எட்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. ஆனாலும் விடா முயற்சியுடன் தன் இலக்கை பிடித்தான் மாசிலாமணி. அவன் தன் மாசற்ற மனதால் எல்லோரும் இந்நிலை அடைய வேண்டும் என்று நினைத்தான்.

உடனே மேலிருந்து ஒரு ஒளி மழை சுகமாகப் பேய்ந்து அவனை அணைத்து, அவனுக்கு பேரானந்தம் கொடுத்தது.

இவ்வளவு ஆனந்தம் எடுப்பாரில்லாமல் இங்கு கொட்டிக் கிடக்க, நாம் ஏன் இந்த உலகத்தில் சிறிய பெரிய ஆசைகளை அடைய முயற்சித்து நேரத்தை வீணாக்குகிறோம் என்று வேதனைப் பட்டான்.

அப்பொழுது மேலிருந்து பலவித நிறங்களைக் கொண்ட ஒளி மாயமான மழை அவன் மீது சொகுசாகப் பொழிந்தது.

அந்த அமிர்தமாக மழைத் துளிகளை நோக்கி முகத்தை உயர்த்தி, வாயைத் திறந்து வேண்டிய அளவு உட்கொண்டான் மாசிலா மணி. அவன் ஒரு ஒளிப் பிழம்பாய் மாறி இந்த உலகமே அவனை சுற்றி வருவது போல் உணர்ந்தான்.

அக்கணமே தண்ணீர் துளிகளை தெளித்து, “ எழுந்திருடா மாசு, பள்ளிக்கூடம் போக நேரமாகிறது,” என்று கூறும் அம்மாவின் குரல் காதில் விழுந்தது. “இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்ச்சி அதிக மதிப் பெண்களோடு தேர்ச்சி பெற்றால் நீ வாழ்க்கையில் அருமையாக முன்னேறலாம்,” என்று தொடர்ந்தாள், அம்மா.

படுக்கையிலிருந்து எழுந்து ஓடி, வீட்டுக்கு வெளியே வந்து, வானத்திலுள்ள மேகங்களை பார்த்துக்கொண்டே நின்றவனை அவன் அம்மா அதிசியமாகப் பார்த்தாள்.

“நான் ஒரு நாள் கண்டிப்பாக அந்த ஆனந்த உலகத்திற்கு போகத்தான் போகிறேன் அம்மா. உன்னையும் கூட்டிச் செல்கிறேன்.

அந்த ஆனந்த ஒளிதான் நம்மைப் படைத்து, நம் ஆற்றலை பயிர் செய்து, தானே உணவாகவும் மாறி நமக்கு உயிரளிகிறது, அம்மா.”

அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் தாயின் கண்ணுக்கு பிள்ளையின் முகம் ஒளிமயமாகத் தோன்றியது.