Yaarukku Yaar Amma


My post content
யாருக்கு யார் தாய்?
மா…. மா … என்று அழுது கொண்டிருந்த குழந்தை ம்ம்ம்மா.. ம்ம்ம்மா.. என்றது பசியால். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், நதியின் நடுவில் தள்ளாடி நடந்து முழுகுவதற்கு தேவையான ஆழத்தை நோக்கி போய்க்கொண்டிருந்த அம்மு ஒரு கணம் திரும்பி சத்தம் வந்த திசையை நோக்கினாள். கரையோரம் மரத்தடியில் அவளைப் போலவே அனாதையாகக் கிடந்து அழுது கொண்டிருந்தது ஒரு குழந்தை. அந்த இரண்டும் கெட்ட நிலையில் முன்னேறி முழுகுவதா, பின்னேறி பற்றுவதா என்று யோசித்த கணத்தில் மறு பிறவி எடுத்தாள் ஒரு தாய். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இதே இடத்தில் தானும் இவ்வாறே கண்டெடுக்கப் பட்டதாகக் கூறிய தன் அம்மாவின் வார்த்தை நினைவுக்கு வந்தது. இறந்து போன அம்மாவே நேரில் குழந்தையாக வந்தது போல் இருந்தது. வளர்த்த தாயின் பரிவை ஏழு வருடம் அனுபவித்து இழந்தது கண்ணில் நீராய் வடிந்தது. அம்மா இல்லாமல் வாழ்ந்த இந்த ஐந்து வருடங்களில் பட்ட கொடுமைகள் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. இனி போறும் இந்த வாழ்க்கை என்று தானும் போய் அம்மாவிடம் சேரலாம் என்று தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வந்தவளுக்கு இதோ இந்த குழந்தை நான் தான் உன் அம்மா என்று சொல்வது போல் அழுதது. அதை அள்ளி எடுத்து ஒரு சொட்டு நதியின் நீரை அதன் நாவில் தடவி தாகம் தணித்த அம்மு யாரிடம் கேட்டு இந்தக் குழந்தைக்கு பால் ஊட்டலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
இது நடந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது. அம்மா குழந்தை இல்லத்தின் பொறுப்பாளர் அம்மு மேடையில் பேசிக் கொண்டிருக்கிறாள். சற்றே மனதை திறந்து கேளுங்கள். “நான் இந்த இல்லத்தை திறந்ததற்கு காரணமான என் அம்மாவை உங்களுக்கு முதலில் அறிமுகம் செயது வைக்கிறேன்.” இவ்வளவு சொல்லிவிட்டு முதல் வரிசையில் யாரையோ சைகையால் மேடைக்கு வரும்படி அழைத்தாள். எல்லோரும் அக்கம் பக்கம் திரும்பி யார் வருகிறார் என்று பார்த்தால் ஒரு பதினைந்து வயது பெண் அழகாக, அமைதியாக மேடை ஏறி அம்முவை அணைத்து முத்தமிட்டாள். அம்மு தொடர்ந்தாள், “உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இவளை நதிக்கரையோரம் கண்டெடுத்து, அப்பொழுதிலிருந்து இவளுக்காகவே உழைத்து, இவள் சொல்லியபடியே இந்த இல்லத்தை தொடங்கி இருக்கிறேன். யாருக்காவது குழந்தை, அதிலும் பெண் குழந்தை வேண்டாமென்றால் இங்கு கொண்டு வந்து விடுங்கள். யாருக்காவது குழந்தை இல்லையென்றால் உங்கள் நேரத்தை எங்கள் இல்லத்தில் செலுத்தி குழந்தைகளுடன் விளையாடுங்கள். இங்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்த பிறகு தன் அம்மா இல்லம் ஆரம்பித்து மற்ற குழந்தைகளுக்கு வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்.” பலத்த கர ஒலியுடன் தங்கள் பெயரை அம்மா இல்லத்தில் பதிவு செய்ய நின்றவர்களின் வரிசை நீண்டு கொண்டே போயிற்று.